top of page

அருள்மிகு அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில்

- நல்லாடை -

26231820_535177866845808_486661639697127
அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம்

சிவாலயங்களில், ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் நடைபெறும். பால், தயிர், எண்ணெய், தேன், சந்தனம், திருநீறு, இளநீர் போன்றவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், வடித்த சோறு கொண்டு அபிஷேகம் செய்வது எதற்காக?
மனிதன் உண்ணும் உணவுப்பொருளில் முக்கிய இடம் பிடிப்பது சோறு; இதை சுவாமிக்கு படைக்கும் போது, பிரசாதம் ஆகிறது. ‘ப்ர’ என்றால் தெய்வத்தன்மை; தெய்வத்தன்மை பொருந்திய சோறு என்பது இதன் பொருள்.

ஒரு வீட்டில் துறவி ஒருவரை சாப்பிட அழைத்தனர்; துறவியும் சாப்பிட்டார். பின்பக்கம் சென்று கையைக் கழுவப் போனவர், வீட்டுக்குள் திரும்ப வரவில்லை; எல்லாரும் தேட ஆரம்பித்தனர். பின்பக்க கதவு திறந்து கிடந்தது; அங்கே கட்டியிருந்த பசுவையும், கன்றையும் காணவில்லை.

அப்போது ஒருவன் ஓடி வந்து, ‘ஐயா… உங்கள் வீட்டுப் பசுவை சாமியார் ஒருவர் ஓட்டிக்கொண்டு செல்கிறார்…’ என்றான்.
உரிமையாளர் பதறியடித்து ஓடினார். துறவியை வழி மறித்து விட்டார்.

‘துறவியான உமக்கு இது அழகா… அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?’ என்று கேட்டார்.
அப்போது தான் துறவிக்கே புரிந்தது; தான் ஒரு மாட்டையும், கன்றையும் கையில் பிடித்திருக்கிறோம் என்பது! உடனே, ‘ஓ’வென்று அழ ஆரம்பித்து விட்டார்.
‘ஏன் அழுகிறீர்…’ என்று சுற்றியுள்ளவர்கள் கேட்க, ‘ஐயையோ… இவர் வீட்டைப் பற்றி விசாரிக்காமல் சாப்பிட்டு விட்டேனே… இவர் வீட்டில் யாரோ ஒருவர் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணத்துடன், சமையல் செய்திருக்கிறார். அந்த உணவை சாப்பிட்டதால், எனக்கும் திருடும் புத்தி வந்து விட்டது…’ என்றார்.
உண்மையில், அன்னதானம் அளித்தவரின் மனைவி, அன்று சமையல் செய்யும் போது, அடுத்த வீட்டுக்காரி அசந்திருக்கும் சமயத்தில், அவள் அடிக்கடி அணியும் நகையை எப்படியாவது திருடி வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் சமைத்துள்ளாள்.

உணவு சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடன் சமைக்க வேண்டும்; இது எல்லாருக்கும் சாத்தியமல்ல தான். ஆனாலும், எப்படி சமைத்தாலும், அதை ஆண்டவனுக்கு படைத்த பின் சாப்பிட்டால், அது, புனிதமடைந்து விடுகிறது; அதைப் பிரசாதமாக நாம் சாப்பிடலாம்.
இந்த அடிப்படையில் தான் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து, அதில் தயிர் சேர்த்து சாப்பிடுகின்றனர்.
வீட்டில் சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடன் சமையுங்கள்.
அன்னாபிஷேகத் திருநாளில் மட்டுமல்ல என்றுமே நல்ல எண்ணங்களுடன் சமையுங்கள்; ஆரோக்கிய வாழ்வைப் பெறுங்கள்.

கார்த்திகை தீபம் -திருக்கார்த்திகை தோன்றிய விதம்

திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள். அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது. உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார்.

தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். பவுர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.

இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம். ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.

தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும்! என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர். காலப்போக்கில் அனைத்து வர்ணத்தாரும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது. சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசக பெருமான்

மஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும். சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.

யோக சிவராத்திரி:
திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும்.

யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.

மகா சிவராத்திரி 
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.

சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது என பொருள் பெறும். சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியானசதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க“மகா சிவராத்திரி ஆகும்.

அம்பிகைக்கு சிவன் அருவுருவில் (உத்பவம்) உபதேசம் செய்த ஆகம உபதேச புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிக்கும் போது புத்திசாலி குழந்தைகள் அமைவர். குபேரனிடம் இருப்பது போல் வற்றாத செல்வம் கிடைத்து நிலைக்கும். ஒரு வருடம் முழுவதும் ஐந்து பிரிவு சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய “இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்கு முக்தி அளிப்பேன்” என திருவருட்சம்மதம் அளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும். உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.

சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தமசிவராத்திரி.

சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அதுஉத்தம சிவராத்திரி.

காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும்மத்திமம்.

இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அதுஅதமம்.

இவை தவிர சிவபெருமானுக்குச் சிறப்பான திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய தினங்களும் சிவராத்திரி தினங்களாக கணிக்கப்பட்டு சிவராத்திரி விரதம் அனுட்டிக்கின்றனர்.

சிவராத்திரி விரத முறை 


சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?


சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.                                                                                         

பிரதோஷம்

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்

மொத்தம் 20 வகை பிரதோஷங்களும் அதன் பலன்களும்:
சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும் நன்றாகும்]
மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் .
1.தினசரி பிரதோஷம்
2.பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7.தீபப் பிரதோஷம்
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்

கார்த்திகை தீபம்
மஹா சிவராத்திரி
பிரதோஷம்

Thank you for Visiting Site

A. Paraninathan

பார்வையாளர்களின் எண்ணிக்கை
bottom of page