அருள்மிகு அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
- நல்லாடை -
கார்த்திகை மாத பஞ்சமூர்த்தி புறப்பாடு
திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் பஞ்சமூர்த்தி வீதிஉலா நடைபெறும் மற்றும் அன்னதானம் வழங்கப்படும்.
பஞ்சமூர்த்திகள்
சிவன்
அம்மன்
விநாயகர்
முருகன்
சண்டிகேஸ்வரர்
ஆருத்ரா தரிசனம்

திருவாதிரைக்கு ஒரு வாய் களி
சிதம்பரத்திற்கருகே ஒரு ஊரில் சேந்தனார் என்ற ஒரு சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் சிவபெருமானிடம் அளவு கடந்த அன்பு கொண்டவர். அவர் தினமும் விறகுகள் வெட்டி விற்று அதன் மூலம் வரும் வருமானத்தில், உணவை தயாரித்து அன்றைய தினம் ஒரு சிவனடியார்க்கு உணவிட்டு, அவர் பசியாற்றி, பின் தான் உணவருந்தி, சிவ சிந்தனையுடன் தனது தொண்டினை சிறப்பாக ஆற்றி வந்தார்.
ஒரு நாள் பலத்த மழை காரணமாக அவர் சேர்த்து வைத்திருந்த விறகுகள் காயாமல் போகவே, அன்றைய தினம் வரும் வருமானமும் தடைபட, நல்ல அரிசியுடன் கூடிய உணவுக்கு வழியின்றி, கிடைத்த கேழ்வரகு தானியத்தில் செய்த களியை வைத்துக்கொண்டு யாராவது சிவனடியார்கள் வந்தால் அவர்களுக்கு தானமிட்டு தொண்டு செய்து அவர்கள் பசியை போக்கிவிடலாமென்று ஆவலுடன் காத்திருந்தார். நேரம் செல்ல செல்ல எவரையும் காணாது சிவபெருமானை துதித்தபடி இருந்தார். பக்தர்களை சோதிப்பதும், பின் அவர்களின் பெருமையை உலகத்துக்கு பறைச்சாற்றுவதும் சிவபெருமானின் லீலைகளில் ஒன்றல்லவா?
இவரின் பெருமையை உலகத்திற்கு அனறைய தினம் காட்டிட உள்ளத்தில் முடிவெடுத்தார் சிவபெருமான். தானே ஒரு அடியார் வேடத்தில், அவரின் இல்லத்திற்கு வந்து அவர் பக்தியுடன் படைத்த கேழ்வரகு களியை “இதுவல்லவோ அமிர்தம்”! என்று பாராட்டியபடி, உண்டு பசியாறி, இரவு பசிக்கும் வேண்டுமென, அவரிடம் வேண்டியதை பெற்றுச் சென்றார்.
மறு நாள் சிதம்பரம் கோவில் பூஜைக்காக கோவிலை திறந்து இறைவனுக்கு அபிஷேக ஆராதைனைகள் நடத்திட வந்து கருவறை கதவை திறந்த சிவாச்சாரியார்கள், இறைவன் குடிகொண்டிருக்கும், கருவறை முழுதும் ஆங்காங்கே சிதறியிருந்த உணவாகிய கேழ்வரகு களியமுதுகளை கண்டும், இறைவனின் வாயிலும், கரத்திலும் இருந்த கேழ்வரகு களியமுதை கண்டும் திகைத்துப் போய் அந்நாட்டு மன்னனிடம் சென்று முறையிட்டார்கள்.
பின் அன்றைய தினம் சிதம்பரம் கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜரின் ரதோத்ஸ்வத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அரசன் முன்னின்று இறைவனை பக்தியுடன் தேரில் எழுந்தருளச்செய்த பின், பக்தியுடன் தேரின் வடம் பிடித்து அரசனும் மற்றும் அனைவரும் ரதத்தை இழுக்க முயல தேர் மழையினால் சேறான இடத்தில் அழுந்திக் கொண்டு நகர மறுத்தது. அவ்வேளையில் அரசனால் தேடப் பட்ட சேந்தனாரும், நடராஜரின்த் தேர் திருவிழாவை கண்டு களிக்க அங்குதான் வந்திருந்தார். அப்போது ஒரு அதியசம் நடந்தது. “சேந்தனாரே.! என் மீது பல்லாண்டு பாடினால் தேரின் சக்கரம் விடுபட்டு நகரும். நீ பாடுவாயாக.!” என்று வானிலிருந்து ஓர் அசரீரி குரல் எழுந்தது. அனைவரும் திகைத்தனர். யார் அவர்? எங்கே அந்த சேந்தனார்? என்று அனைவரும் திகைக்க, “இறைவா! எனக்கு பாடவெல்லாம் தெரியாதே! இந்த ஏழைக்கு உன் மீது வைத்திருக்கும் அன்பைத் தவிர எனக்கு என்ன தெரியும்.? என இறைவனின் திருமுகத்தை நோக்கி சேந்தனார் மெய்யுருகி கதற, “உன்னால் இன்று முடியும்! பாடு” என்ற அசரீரியின் குரலுக்கு அடுத்த நொடி மீண்டும் ஒரு அதிசயம் நடந்தது.
சேந்தனார் இறைவனின் அருளால் இறைவனை வாழ்த்தி
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே
என்ற பாடலை முதல் பாடலாகக் கொண்டு பதின்மூன்று பாடல்களாக பல்லாண்டு பாடினார்.
உடனே பள்ளத்திலிருந்து விடுபட்டு தேர் நகர்ந்தது. அனைவரும் சேந்தனாரின் காலில் விழுந்து வழிபட்டனர். அரசன் சேந்தனாரின் பெருமைகளை தன் கனவில் கண்ட நிகழ்ச்சியினை,அனைவருக்கும் உரைக்க, “இறைவனே வந்து என் கையால் உணவு புசித்தானா?” என்ற மகிழ்வில் பக்தியின் உச்சத்தில் சேந்தனார் மனம் கனிந்து உருகினார்.
இவ்வாறு தன் பக்தனுக்கு சிவபெருமான் அருள் புரிந்ததும் ஒரு திருவாதிரை நாளே! இன்றும் சிவன் கோவில்களில், களி செய்து இறைவனுக்கு படைத்து பிரசாதமாக வழங்குகின்றனர். “திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி! உண்ணாதவருக்கு நரகக் குழி ” என்ற பேச்சு வழக்கும் உண்டு.
கோவில்களிலும், வீடுகளிலும் இறைவனுக்குப் பிடித்தமான கேழ்வரகு களியமுது செய்து சிவபெருமானுக்கு படைத்து, இறைவனின் அருள் பெற பூஜைகள் செய்து திருவாதிரை நாளில் பக்தியுடன் சிவ! சிவ! என்று பக்தி பரவசமாய் பஜனைகள் பல செய்து அவனருளைப் பெற துதிப்போமாக !!!
அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை அருள்மிகு நடராஜப் பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!!
சீரார் திருவையாறா போற்றி போற்றி!!